பவ்ரல் அமைப்பு 1987 ஆம் ஆண்டில் தேசிய ரீதியான பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு இலாபம் ஈட்டாத அமைப்பாக ஆரம்பத்தில் 1982 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மீண்டும் 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீளப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதால் ஏற்பட்ட பாதிப்புக்களால், தேர்தல்களின் ஜனநாயகத் தன்மையைப் பாதுகாப்பதற்கு சிவில் சமூக அமைப்புக்களின் தலையீடுகள் அவசியமென்பதை உணரப்பட்ட வேளையில் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், தேர்தலின் பின்னரும் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பொதுமக்களின் முயற்சிகளை ஊக்குவிப்பதே பவ்ரல் அமைப்பை உருவாக்குவதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அமைந்தது. பவ்ரல் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அதிகளவான சிவில் சமூக அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபை தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் என நாட்டில் இடம்பெறும் அனைத்துத் தேர்தல்களையும் கண்காணித்து வருகின்றது. அது பல வருடகாலமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள வாக்காளர்களின் வாக்குரிமைகள், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி போன்ற துறைகளில் பரிந்துரைத்து வாதிடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தியுள்ளது. அதேபோன்று பவ்ரல் அமைப்பு தமது அனைத்து செயற்பாடுகளின் போதும் உண்மையான நடுநிலைத்தன்மையைப் பேணி வருகின்றது.
தொலைநோக்கும் பணிக்கூற்றும்
பார்வை
“ஜனநாயகப் பெறுமதிகளை ஆதரிக்கின்றதும், ஆட்சித்துறையின் பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையிலான அரசியல் அறிவுபடைத்த, அதிகார உரிமை கொண்ட பிரஜைகளுடன் ஜனநாயகத்தைப் பேணிவளர்க்கும் தேசம்”
பணிக்கூற்று
“மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட பிரஜைகளின் முனைப்பான பங்கேற்பின் மூலம் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதும், அனைவரையும் உள்ளடக்கியதான சுதந்திரமானதும்; நீதியானதுமான தேர்தல்களை ஊக்குவிப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும், நல்லாட்சியை நிலைநாட்டுவதற்கும் தகுந்த ஆற்றல்மிக்க சிவில் சமூகத்தைக் கட்டியெழுப்புதல்”