"மாற்றத்திற்கான பாதை” ஆரம்பமாகியது
இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய அனுபவங்களைப் பெற்றுத்தரும் “மாற்றத்திற்கான பாதை” பயிற்சிப் பட்டறை நேற்றைய தினம் (19) மங்களகரமாக ஆரம்பிக்கப்பட்டது.
ஃபவ்ரல் அமைப்பின் வழிநடாத்தலில் மேற்கொள்ளப்படும் இப்பாடநெறி தொடர்ச்சியாக ஒரு வருடம் நடாத்தப்படவுள்ளது. அரசியலில் ஆர்வம் காட்டுபவர்களும், தற்போது பிரதேச ரீதியாக முனைப்பான அரசியலில் ஈடுபட்டுவரும் பெண்களை இலக்காகக் கொண்டு நடாத்தப்படும் இப்பாடநெறியில் கலந்து கொள்வதற்காக கிட்டத்தட்ட 500 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதுடன், அவற்றில் நூறு பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது குறித்த பெண் பிரதிநிதிகள் மற்றும் ஃபவ்ரல் அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டது. இப்பாடநெறியில் ஆளுமை விருத்தி, பரப்புரைச் செயற்பாடுகளை திட்டமிடல், ஊடகங்களுடன் தொடர்பைப் பேணல், சமூக ஊடகங்களைக் கையாளல் போன்ற நடைமுறை ரீதியான விடயங்கள் மற்றும் அரசியல் ரீதியான நிகழ்ச்சிநிரல்கள் தொடர்பாகவும் தெளிவூட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலும் அவர்களை பிரதேச அரசியலுக்கு
அப்பால் பாராளுமன்றம் வரை கொண்டு செல்வதே ஃபவ்ரல் அமைப்பின் எதிர்பார்ப்பாகும்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது, தாம் சமூக முன்னேற்றத்திற்காக பங்களித்து உயரிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு தங்களை அர்ப்பணிப்பதாக இப்பாடநெறியில் கலந்து கொள்பவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வணக்கத்தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பெண்கள் அரசியலில் முனைப்பாக ஈடுபடுவதால் சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெளிவுபடுத்தியதுடன், ஃபவ்ரல் அமைப்பு அடியெடுத்து வைத்துள்ள இவ்வரலாற்று படிக்கல்லை மிகவும் பாராட்டினர்.
“மாற்றத்திற்கான பாதை” இன் ஆரம்ப நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் டலஸ் அழஹப்பெரும, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர, இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பர்னாந்துபுல்லே, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னப்பிரிய போன்றோரும், “மாற்றத்திற்கான பாதை” பாடநெறியின் ஆலோசனைக் குழுவின் சார்பில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திசாநாயக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் சட்ட அலுவலர் சட்டத்தரணி கயனி பிரேமதிலக, தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையத்தின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக ஆகிய பிரமுகர்கள் கலந்து
கொண்டனர்.