தேர்தல் வரலாற்றில் மேலுமொரு தீர்மானம்மிக்க வழக்குத் தீர்ப்பு
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமொன்றை உருவாக்கி மொனராகல மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க அவர்கள் நேற்றைய தினம் (13) முக்கியமான வழக்குத் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார்.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மொனராகல மாவட்டத்தில் ஒரு உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் தேர்தல் பிரச்சார காலத்தில் வாக்காளர்களுக்கு பல்வேறு இலஞ்சங்களை வழங்கியமை தொடர்பாக ஃபவ்ரல் அமைப், தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையத்தின் ஒத்துழைப்புடன் மொனராகல மதுரகெட்டிய வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ட்ப்ளிவ்.எம். சுனில் சாந்த அவர்களுக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்குத் தீர்ப்பு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு குறித்த வட்டாரத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட தரங்க திசாநாயக்க அவர்களால், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அங்கத்தவர்கள், மொனராகல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், மொனராகல மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட தொண்ணூற்று ஐந்து பேரைப் பிரதிவாதிகளாகப் பெயரிட்டுத் தொடரப்பட்டது.
அதற்கமைய, இலஞ்சம் வழங்கி வெற்றியீட்டிய வேட்பாளரின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டதுடன், அதற்கு அடுத்ததாக அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்ட வேட்பாளரை நியமிக்குமாறும் மேல்
நீதிமன்ற நீதிபதி அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இவ்வழக்கின் பிரதான பிரதிவாதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா அவர்கள் ஆஜராகியதுடன், அரச அலுவலர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனிஷ்க ராஜகருணா அவர்களும் ஆஜராகியிருந்தனர்.